இலங்கை என்பது நம் தாய் திரு நாடு எழில் மிகுந்த இயற்கை வளம் நிறைந்த நல் நாடு மாணிக்க முத்துக்களும் மாண்புறு காட்சிகளும் மனதை கவர்ந்திடும் நாடு நுவரெலியா பகவந்தலா மலையக பேழை தேயிலையால் பொன் விளையும் பூம் பொழில் சோலை சிவனொளி பாதமலை தலதா மாளிகையும் தெரிந்திடும் மாமலை நாட்டில் யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன் சுவை ஊறும் பனை வளமும் புகையிலையும் ஒன்றாக வளரும் கந்தனின் நல்லூர் கண்டு கடல் வளம் நிறைய உண்டு கலை வளம் பெருகுது அங்கு கோணேஸ்வரர் கோயில் கொண்ட திருமலை ஊரே ராம நேசர் ஞாபகமும் வருகுது அங்கே கன்னியா வெந்நீர் ஊற்றும் கலங்கரை ஒளி விளங்கும் இயற்கை துறைமுகம் தானே மீன் பாடும் தேனாடு கிழக்கிலே உண்டு வீர நகர வன்னியிலே வேளாண்மை உண்டு மடு மலை நாயகியும் மன்னாரில் பவனி வரும் மங்காத காட்சியும் உண்டு சீகிரியா பொலநறுவை அநுராபுரமும் கம்புள்ளை வில்பத்தும் கதை பல சொல்லும் கந்தளாய் இனித்திடுதே கல்லோயா மயக்கிடுதே கண்களால் காண அழைக்குதே தலை நகராம் கொழும்பின் நாகரீகமும் கண்டு காலி மாத்தறை நகர் பல ஊர்வலம் சென்று காணாத மனித நேயம் காணலாம் இலங்கையிலே இறைவனின் அன்பு வளருதே.